மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்தில் பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக்கொல்லப்பட்டனர். 20 பேர் கொண்ட குழு , பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று, பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டி அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால், உயிரிழந்த பட்டியலினத்தவர்கள் பசுவைக் கொன்றார்களா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜூன் சிங் ககோடியா ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலினத்தவர்கள் அடித்துக்கொலைசெய்யப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், அவர்களில் 6 பேர் மீது கொலைக் குற்றம் சுமத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த புகார்தாரர் பிரஜேஷ் பாட்டி ஊடகங்களிடம் பேசும்போது, “அந்தக் கும்பல், சம்பத் பாட்டி மற்றும் தன்சா ஆகிய இருபழங்குடியினரை கட்டைகளால் கொடூரமாகத் தாக்கினார்கள்” என்று தெரிவித்தார்.
“இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணையை அறிவித்துக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசைக்கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். மேலும், காயமடைந்தவருக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் அரசை வலியுறுத்தியிருக்கிறார்.