Leaders Ramadan wishes to people: உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு தலைவர்கள் பலரும் தங்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகளார் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும், ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இஸ்லாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.
அவர்களது உற்ற தோழனாக, சிறுபான்மையினரின் காவலராக, அவர்களில் ஒருவராகவே மறைந்த முதல்வர் கருணாநிதி விளங்கினார். எண்ணற்ற நலத்திட்டங்களைக் திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார். அவருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது. அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் திமுக அரசும் சிறுபான்மை மக்களின் அரணாகத் தொடர்கிறது.
முதல்முறையாக 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்துக்கு ஒரு மகளிர் சங்கம் என்பதைத் தளர்த்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் தமிழக அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ’ரம்ஜான்’ திருநாளில் எங்கள் உளங்கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான்பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் எங்கள் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், எங்களது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ”இனிய ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மனிதர்களுக்கு சேவை செய்யவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட நம்மை நாமே அர்ப்பணம் செய்து கொள்ள உறுதி ஏற்போம்” என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துச் செய்தியில், ”ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த ரமலான் பண்டிகை நேரத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இசுலாமிய சகோதர , சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனித குலச் சேவைக்கு நம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் இது.
முகமது நபியின் அன்புணர்வு, அறவுரை குறித்த போதனைகள், எக்காலத்தும் நம்முடன் நின்று, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டுப்பற்றுடன் கூடிய, தாய் நாட்டு மீதான உயர்வு மனப்பான்மையுடன் நாம் நேர்மையான, முற்போக்கான வாழ்க்கையை நடத்திட நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
சமுதாய மற்றும் வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்கான அன்பைப் பரப்பவும், போதிக்கப்படும் தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீகப் பாதையை கடைப்பிடிக்க இந்த நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Happy Eid al-Fitr 2022: அல்லாஹ்வின் அனைத்து பரலோக ஆசீர்வாதங்களுக்கும் நன்றி செலுத்தும் ஈகை திருநாள்!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள் என்பதை ரமலான் செய்தியாக தமிழக காங்கிரஸ் கூற விரும்புகிறது. இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில், ”ரமலான் கற்றுத் தரும் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி. உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், ”ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.