ஜெய்பூர் : உத்தர பிரதேசத்தை பின்பற்றி ராஜஸ்தான் அரசும் ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றத் துவங்கியுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2018ல் பார்மர் மாவட்டத்தில் உள்ள ‘மியான் கா படா’ என்ற கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என, மாற்றப்பட்டது. ஆனால் அதன் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மியான் கா படா ரயில் நிலையத்தின் பெயர் மகேஷ் நகர் என, மாற்றப்பட்டது. இதற்கான விழாவில் மத்திய ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உ.பி.,யில் மூன்றாண்டுகளுக்கு முன் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தியா என மாற்றப்பட்டது. ஆனால் அங்குள்ள பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயர், கடந்த ஆண்டு, அக்., 21ல் தான் ‘அயோத்தியா கண்டோன்மென்ட்’ என மாற்றப்பட்டது.இதேபோல முகல்சராய் ரயில்வே நிலையத்திற்கு, ஜனசங்க நிறுவனர் பண்டிட் தீன தயாள் உபாத்யாயா பெயரும், வாரணாசியில், மண்டுவாடிஹ் ரயில் நிலையத்திறகு பழையபடி பனாரஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டன.
கடந்த ஆண்டு மத்திய பிரதேச தலைநகர் போபாலில், ஹபிப்கன்ஞ் ரயில் நிலையத்தின் பெயர் ‘ராணி கமலாபதி ரயில் நிலையம் என, பெயர் மாற்றப்பட்டது. நவீன வசதிகளுடன் மறுநிர்மாணம் செய்யப்பட்ட இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Advertisement