மாஸ்கோ:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும், அதனால் அதிபர் பதவியை தன் நெருங்கிய ஆதரவாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 69, உடல் நிலை குறித்து கடந்த சில வாரங்களாகவே பல யூகங்கள் வெளியாகி வந்தன.
ஆலோசனை
‘பர்கின்சன்’ எனப்படும் நரம்பு தளர்ச்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. சமீபத்தில் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷெய்கு உடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது உட்கார முடியாமல், மேஜையை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்ததாக படங்கள் வெளியாகின.இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் போஸ்ட்’ என்ற பத்திரிகையில், புடின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்ய உளவுத் துறை முன்னாள் உயரதிகாரி ஒருவர் நடத்தும் இணையதள சேனலில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:புடினுக்கு புற்றுநோய் உள்ளது. அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வு தேவைப்படுவதால், அதிபர் பொறுப்பை, நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலர் நிகோலய் பட்ருஷேவிடம் ஒப்படைக்க புடின் முடிவு செய்துள்ளார்.
புடினுக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளரான பட்ருஷேவ் உடன் சமீபத்தில் புடன் நீண்ட நேரம் பேசியுள்ளார். அப்போது, பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைப்பதாக கூறியுள்ளார். ஒருவேளை சிகிச்சை நீண்ட காலம் நீடித்தால் அல்லது தனக்கு ஏதாவது ஏற்பட்டால், அதிபர் பொறுப்பை தொடர வேண்டும் என்றும் பட்ருஷேவிடம் அவர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பரபரப்பு
ஆனால், இது குறித்து அமெரிக்க உளவு அமைப்புகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், புடினைவிட பட்ருஷேவ் மிகவும் மோசமானவர் என, அமெரிக்க உளவு அமைப்புகள் கூறியுள்ளன.புடினைப் போலவே, பட்ருஷேவும், ரஷ்ய உளவுப் பிரிவில் பணியாற்றியவர்.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் தன் பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement