ராகுல் காந்தி பார்ட்டி வீடியோ: காங்கிரஸ் விளக்கம் – முழு விவரம்!

காங்கிரஸ்
மூத்த தலைவர்
ராகுல் காந்தி
எங்கோ வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், வெளிநாட்டு நைட் கிளப் ஒன்றில் அவர் பார்ட்டியில் கலந்து கொண்டது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது போன்றும், செல்போனை இயக்குவது போன்றும் உள்ளது.

ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர் எனவும், அந்நாட்டு பிரதமரை ஹூ யாங்கி எனவும், நேபாள முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலியை ஹனிட்ராப்பில் (பாலியல் வலை வீசி அதில் சிக்கும் வைத்து மிரட்டுவது) சிக்க வைத்தவர் எனவும் பலவாறான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கும் பாஜகவினர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக தேசிய தகவல் தொழிநுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், “மும்பை தாக்குதலின் போது, ராகுல் காந்தி இரவு விடுதியில் இருந்தார். காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் சமயத்தில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு பார்ட்டில் பங்கேற்றிருக்கிறார். எந்த சமயத்திலும் அவர் சீராகவே இருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சூழலில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாடவும், கேக் வெட்டி கொண்டாடவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது போல் அழைக்கப்படாத விருந்தாளியாக ராகுல் காந்தி செல்லவில்லை. நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி சென்றுள்ளார்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனன் தவறு இருக்கிறது? சங்கிகள் ஏன் அவரைப் பற்றி பயப்படுகிறார்கள்? சங்கிகள் ஏன் பொய்களை பரப்புகிறார்கள்? நாம் அனைவரும் தனிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் நேபாள பயணம் குறித்து அந்நாட்டு பத்திரிகையான காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள் கிழமை மாலை விஸ்தாரா விமானம் மூலம் மாலை 4.40 மணியளவில் நேபாளத் தலைநகர் காத்மாண்டு வந்ததாகவும், அவருடன் மூன்று பேர் வந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் உறுதி படுத்தியுள்ளன. ராகுல் காந்தியும் அவரது நண்பர்களும் காத்மாண்டு மேரியாட் ஹோட்டலில் தங்கியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. பத்திரிகையாளரான சும்னிமா உடாஸின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சும்னிமா உடாஸ் – நிமா மார்டின் ஷெரபா ஆகியோரின் திருமணம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. அவர்களது திருமண வரவேற்பு மே 5ஆம் தேதி ஹயாத் ரீஜன்ஸி ஹோட்டலில் நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ள சும்னிமா உடாஸின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை அழைத்துள்ளதாக மியான்மருக்கான நேபாள தூதராக இருக்கும் சும்னிமா உடாஸின் தந்தை பீம் உடாஸ் தெரிவித்துள்ளார். திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த வேறு சில விவிஐபிகளும் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார் என்றும் காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.