கோவை: ரேஷன் கடையில் பெற்ற பொருட்களை பிறருக்கு விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சம்மந்தப்பட்ட பயனாளிகளை முழுமையாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், பயனாளிகள் தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் பொருள் பெறும் வசதியை அளிக்கும் வகையிலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் வாயிலாக அட்டைதாரர் விவரம் சரிபார்க்கப்படுகிறது. அதன்பின்னர் பொருட்கள் விநியோகம் செய்யும் முறை கடந்த 2020 அக்டோபர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப தலைவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், குடும்ப உறுப்பினர் அல்லாத பிற நபர்களிடம் குடும்ப அட்டையை பயன்படுத்த கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ரேஷன் கடைக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் தங்களது குடும்ப அட்டைக்கு பொருட்களை பெற ஒரு நபரை அங்கீகரித்து சம்மந்தப்பட்ட தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலரால் ஒப்புதலளிக்கப்பட்ட அங்கீகார சான்று மூலமாக பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கைரேகை பதிவாகாத நபர்கள் அருகில் உள்ள வங்கி, தபால்நிலையம், வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்தில் தங்களது கைரேகையினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைக்கு பெறப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது குற்றமாகும். இதனால், சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கிவைத்து கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய வழிவகை ஏற்படும். எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைக்கு பெற்ற பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அத்தியாவசிய பண்டகங்கள் சட்டம் 1955-ன் கீழ் சம்மந்தப்பட்ட அட்டைதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.