வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலி, உடல் நல பரிசோதனை மேற்கொள்ள முயன்ற பராமரிப்பாளரை தாக்கியது.
நகுலன் என்ற பெயர் சூட்டப்பட்ட வெள்ளைப்புலி, கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளாமல் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவருடன் சென்ற அதன் பராமரிப்பாளர் செல்லையா புலியின் கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக அதன் ஆசன வாய்ப்பகுதியில் மாதிரிகளை சேகரிக்க முயன்றுள்ளார்.
அப்போது கூண்டு சரியாக அடைக்கப்படாததால் வெள்ளைப்புலி செல்லையாவை திடீரென தாக்கியது. இதில் நிலைகுலைந்து விழுந்த செல்லையாவை மீட்ட பூங்கா ஊழியர்கள் உடனடியாக கூண்டை அடைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் பராமரிப்பாளர் செல்லையா தற்போது நலமுடன் இருப்பதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.