“விஜய் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்; அஜித்தும் ஏற்க வேண்டும்”- ஆர்.கே.செல்வமணி பேட்டி

நடிகர் அஜித் குமார் தனது திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளதாக செய்தி வந்ததுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு நேரடியாக எந்த கடிதமும் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக நாளைய தினம், சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம், புதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், கில்ட் அமைப்பிற்கும் பொருந்தும் என்றே நாங்கள் கடிதம் வழங்கி உள்ளோம். தனியாக அவர்களிடம் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. எனவே, இதுகுறித்து நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன், காலை 10.30 மணிக்கு பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். சுமூகமாக இந்தப் பேச்சு வார்த்தை முடிவடையும் என நம்புகிறேன்.

image

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8-ம் தேதி நடைபெற இருப்பதால், அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது. நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால், தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நடிகர் அஜித் குமார் தனது படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்கள் கோரிக்கை இதுதான்.

சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. இதே கோரிக்கையை நடிகர் விஜயிடம் நாங்கள் முன்னர் வைத்த போது விஜய் எங்கள் கோரிக்கை ஏற்றார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.