சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் அரசுத்துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது. ஏப்ரல் 29-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை இடம்பெற்றது.
அதன்பிறகு அரசு விடுமுறை வந்ததால் சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் நாளை சட்டசபை கூடுகிறது.
நாளைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீது எம்.எல்.ஏ.க்கள் பேச உள்ளனர்.
6-ந்தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7ந் தேதி திட்டம், வளர்ச்சி, பொதுசிறப்பு திட்ட செயலாக்கம் நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
மே 9, 10 ஆகிய 2 நாட்களில் முதல்-அமைச்சரின் துறையான போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தீயணைப்பு துறை, மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்தும் இதில் இடம் பெறுகிறது.
போலீஸ் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது அவற்றுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது பதில் அளிப்பார்.
அன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன குறைகளை சுட்டிக்காட்டி பேசுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவாதத்தின் இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார்.