HIT First Case, Pagal உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் விஷ்வக் சென். அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் `அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’. இந்தப் படத்திற்கு ப்ரோமோஷன் என்கிற பெயரில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்ததாக அவர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஷ்வக் சென்னும் அவரது நண்பர்களும் காரில் வந்து கொண்டிருந்த போது யாரென தெரியாத ஒரு நபர் அவர்களின் வாகனத்துக்கு முன்பு பாய்ந்து `அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ படத்தின் ஹீரோவை தான் பார்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் இங்கேயே தீக்குளித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அவரை எதிர்கொண்ட விஷ்வக்கும் நண்பர்களும் அவர் கையில் இருக்கும் கேனைக் கைப்பற்ற முயன்றனர்.
சுற்றிலும் பொதுமக்கள் பார்க்க இந்தச் சம்பவம் சாலையில் அரங்கேறி கொண்டிருக்கிறது. கொஞ்ச தூரம் கார் சென்ற பிறகு மீண்டும் அந்த மனிதர் காரில் தொற்றிக் கொண்டு வரவே விஷ்வக் இறங்கி அவரை சமாதானம் செய்ய முயன்று தன் காரில் ஏற்றி அனுப்பி விட்டு ஆட்டோவில் செல்கிறார். இவை அனைத்தும் வீடியோவாகக் காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் பகிரப்படுகிறது.
இந்த சம்பவம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது என்று பின்னர் தெரிய வருகிறது. இதற்கு காரணமாக இருந்ததே விஷ்வக் சென்தான் எனவும் சொல்லப்படுகிறது. படத்திற்கான ப்ரோமோஷன் என்கிற பெயரில் சாலையில் இது போன்ற அபத்த நாடகத்தை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்ததற்காக அவர் மீது மனித உரிமை ஆணையத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். `மலினமான விளம்பர யுக்தி’ என்று இணையத்தில் இந்த நிகழ்வு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நேற்று விஷ்வக் சென் கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாதமொன்றில் அவர் பேசியதும் சர்ச்சையாகி உள்ளது. `மனச்சோர்வில் இருப்பவன்’ என்றும் `பாகல் சென்’ என்றும் நெறியாளர் குறிப்பிட்டதால் விஷ்வக் அதனைக் குறிப்பிட்டு பேசுகிறார். கொஞ்ச நேரத்தில் நெறியாளர் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற சொல்லவும் விஷ்வக் வெளியேறிய நிகழ்வும் நடந்திருக்கிறது.