ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குடிமைப் பணி தேர்வுக்காகத் தயாராகிவரும் ஏராளமானோர் இந்த முகாமில் கலந்துகொண்டார்கள்.
முகாமின் தொடக்கமாக சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பாக ஒருவருட இலவசப் பயிற்சிக்கான Scholarship தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி முகாமின்போதே அறிவிக்கப்பட்டதுடன், அவர்களின் இலவசப் பயிற்சிக்கான சான்று அளிக்கப்பட்டது,
குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி முகாமை நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு IAS தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், “மக்களுக்குப் பணியாற்ற எந்த வேலையாக இருந்தாலும் அதை உளப்பூர்வமாக நேசித்துச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வி.ஏ.ஓ முதல் ஐ.ஏ.எஸ் வரை எந்தப் பணியில் இருந்தாலும் மக்களுக்கு உதவிகளைச் செய்ய முடியும்.
தற்போதைய காலகட்டத்தில் கற்பதற்கு நமக்குத் தேவையான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதனால் மொபைல் இருந்தாலே நம்மால் எல்லா தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது.
நானும் உங்களைப் போலவே குடிமைப் பயிற்சிக்குத் தேர்வு செய்துகொண்டிருந்தபோது இதுபோன்ற கருத்தரங்கின் மூலமாகவே எனக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்கிற ஐடியா கிடைத்தது. நாம் சிரமப்பட்டுப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்மார்ட் ஆகப் படித்தாலே வெற்றியைச் சுலபமாகக் கைப்பற்ற முடியும்.
அதோடு, நாம் தனியாளாக எப்போதும் பாடப்புத்தகங்களோடே இருந்துகொண்டிருக்கக் கூடாது. தேர்வுக்குத் தயாராகும் காலகட்டத்தில் நமக்கு நண்பர்கள் மிகவும் அவசியம். ஒன்றாக இணைந்து நண்பர்களோடு படிப்பதில் கிடைக்கும் பயன் அதிகம். நான் படிக்கும்போது 6 நண்பர்கள் சேர்ந்து படித்தோம். அதில், நண்பர்கள் எல்லோருமே ஒரே நேரத்தில் ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டோம்.
நமக்கு எந்தப் பாடம் விருப்பமானது என்பது முடிவு செய்து அந்தப் பாடத்தைத் தேர்வு செய்து குடிமைப்பணிக்குத் தயாரானால் வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும். படிக்கும்போது மன அழுத்தம், சோர்வு வரக்கூடும். ஆனால் அதை எல்லாம் வெற்றிகரமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
சிலர் தேர்வுக்குத் தயாராகும்போது யாரிடமும் பேச மாட்டார்கள். ரூமுக்குள் போய் பூட்டிக்கொண்டு படித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து இருப்பது முக்கியம். அவர்களின் மூலமாகவே நமது மன அழுத்தங்களை நீக்க முடியும். அனைவரும் தேர்வில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் T.P.சுரேஷ்குமார் IPS பேசுகையில், “நாம் படிக்கும் கல்விக்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆனால் பார்ப்பது காவல்துறை வேலை. அதனால் உங்களுக்கு என்ன நன்றாக வருமோ அதைப் படியுங்கள்.
நான் பொறியியல் பட்டம் பெற்றிருந்தபோதிலும் TNPSC தேர்வுக்கு ஜியாலஜி பாடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதன் பின்னர் 40 நாள்கள் கடுமையாகப் படித்தேன். எல்லோரும் மூன்றாண்டுகள் படிக்கும் பாடத்தை நான் நாற்பது நாள்களில் முழுமையாகப் படித்து முடித்தேன். அதனால் எனக்கு தேர்வு எழுதும்போது மிகவும் ஈஸியாக இருந்தது.
ஒவ்வொருவரும் நல்ல புரிதலுடன் பாடங்களைப் படித்தால் வெற்றியை எளிதாகப் பெறமுடியும். நாம் படிப்பதற்கு பெற்றோர் மற்றும் நண்பர்களின் சப்போர்ட் அவசியம். நாம் எந்தப் பாடத்தில் ஸ்ட்ராங், எதில் வீக் என்பது நமக்குத்தான் தெரியும். அதனால் நமது அறிவை அதிகரிக்க நம்மால் மட்டுமே முடியும்.
நீங்கள், உங்களுக்குப் பிடித்த பாடத்தைப் படியுங்கள். ஆனால் தொய்வு இல்லாமல் படியுங்கள். ஒரு நாள் கூட சோர்வு இல்லாமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். காரணம், முன்பெல்லாம் ஒரு காலிப் பணியிடத்துக்கு ஆயிரக்கணக்கில் போட்டி இருந்தது. இப்போது லட்சக்கணக்கான பேருடன் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எது வந்தாலும் அதை என்னால் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். முழுமனதுடன் தேர்வுக்காக தயார் செய்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். அதனால் முயற்சியைக் கைவிடாமல் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆல் தி பெஸ்ட்…” என்றார்.
சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனரும் இயக்குநருமான S.சிவராஜவேல், UPSC, TNPSC தேர்வுக்குத் தயார் செய்வதற்கான சுலபமான வழிமுறைகள் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார். “ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள் டெல்லிக்கு அல்லது சென்னைக்குச் செல்ல வேண்டும் என்கிற நிலை ஒரு காலத்தில் இருந்தது.
இங்குள்ளவர்களுக்கும் குடிமைப் பணிக்கான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 20 வருடங்களுக்கு முன்பு நெல்லையில் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியை தொடங்கி நடத்தி வருகிறோம். இங்கு படித்த நூற்றுக்கும் அதிகமானோர் குடிமைப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
பொதுவாக UPSC அல்லது TNPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் ஏதாவது பயிற்சி மையத்தில் சேர வேண்டுமா என்று கேட்டால், நிச்சயமாக சேர வேண்டும் என்று சொல்லுவேன். காரணம், நாம் என்னதான் தனியாகப் படித்தாலும் பயிற்சி மையத்தில் சேர்ந்தால் அங்கு நம்மை ஃபைன் ட்யூன் செய்வார்கள். அதன் மூலம் நமது கவனம் வெற்றியை நோக்கிச் செல்ல உதவிகரமாக இருக்கும்.
பொதுவாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருமே புத்திசாலிகள். அதனால் தமிழகத்தின் தலைமைச் செயலகத்துக்குச் சென்றால் அங்கு பணியாற்றுபவர்களின் பலர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் எந்த மாநிலத்தின் தலைமைச் செயலகத்துக்குச் சென்றாலும் அங்கும் நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பார்கள்” என்று பேசியதுடன், பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
இந்தப் பயிற்சி முகாமில், சிலவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியில் படித்து குடிமைப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேர்ந்துள்ள A.ராகுல் IPS மற்றும் E.G.சண்முகவள்ளி IRS ஆகியோரும் கலந்துகொண்டு தாங்கள் தேர்வுக்குத் தயாரான விதம் குறித்து உரையாற்றினார்கள். இந்த ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள், இந்த முகாம் தங்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாகக் கருத்துத் தெரிவித்தனர்.