Next 4 days weather forecast for Tamilnadu: தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று முதல் ஆரம்பிக்கும் நிலையில், வெப்பசலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால், ஓரிரு இடங்களில் வெயிலின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், இன்று முதல் 7-ம் தேதி வரையிலான அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக,
04.05.2022 (இன்று) அன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.04.2022 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
06.05.2022 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.05.2022 அன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய (கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை) மாவட்டங்கள், காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய (ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி) மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி
04.05.2022 அன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக 4-ம் தேதி, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
05.05.2022 அன்று, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படியுங்கள்: 12 ஆண்டுகள் காத்திருப்பு.. மீண்டும் புத்துயிர் பெறும் சென்னை மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலச் சாலைத் திட்டம்!
06.05.2022, அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
07.05.2022 அன்று, வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.