சென்னை:
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்லும் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசு தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தை தடை செய்து அறிவித்துள்ளது. இதற்கு அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சட்டசபையில் இன்று இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது, ‘அவர் சன்னிதானத்துக்கும், சடங்குகளுக்கும் பிரச்சினை இல்லாமல் முதல்-அமைச்சர் நடுநிலையோடு தீர்வு காண்பார்’ என்று கூறினார்.
இந்த நிலையில் சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். அதி.மு.க. உறுப்பினரான நத்தம் விஸ்வநாதன்பேசியபோது, ‘பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. ஆன்மீகத்துக்கு எதிராக இருப்பது போல சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். அதை இங்கேயும் பதிவு செய்ய அ.தி.மு.க. உறுப்பினர் முயற்சி செய்துள்ளார். இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழி நடத்திய ஆட்சி, மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இது திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.