இந்தியாவின் முதல் இல்லற புனிதர் பட்டம் பெறும் தேவசகாயம்

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மறைபரப்பு பணியில் ஈடுபடுவோர், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி உலக மக்களின் நன்மைக்காகவும் பாடுபட்டனர்.

இறப்பிற்கு பிறகும் அவர்கள் மக்களின் மனதில் இடம்பிடித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வந்தனர். அந்த வகையில் மக்களால் பெரிதும் போற்றப்படும் நபர்களுக்கு உலக கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகன், புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கும்.

இந்த பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படும். அந்த நடைமுறைகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்த பட்டத்தை வழங்குவார்.

அந்த வகையில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மக்கள் பணியாற்றிய அன்னை தெரசா, கேரளாவில் கன்னியாஸ்திரியாக இருந்து மறைந்த அல்போன்சம்மாள் ஆகியோருக்கு ஏற்கனவே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு வருகிற 15ந்தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

தேவசகாயம், கன்னியா குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 23.4.1712-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம், வடமொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடி முறைகள் ஆகியவற்றையும் கற்று தேர்ந்தார்.

ஆயுத பயிற்சியும், போர் பயிற்சியும் பெற்ற நீலகண்டன், திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா படையில் வீரராகவும் இருந்தார். அப்போது அவருக்கு திருமணமும் நடந்தது.

அதன்பின்பு நீலகண்டனை தனது அரசவை அலுவலராக மன்னர் நியமித்தார். அப்போது நடந்த குளச்சல் போரில் டச்சு படைதளபதியாக இருந்த டிலனாய் என்பவரை மன்னர் மார்த்தாண்ட வர்மா சிறைபிடித்தார்.

கத்தோலிக்கரான டிலனாய், சிறைக் கைதியாக இருந்தாலும் மன்னரின் அன்பை பெற்றதால் அவரது படைதளபதியாக நியமிக்கபட்டார்.

அப்போது டிலனாயுடன் நீல கண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நீலகண்டன் தொடர் பணிகளால் துயருறும் போது டிலனாய் அவருக்கு ஆறுதல் கூறினார். அதோடு ஏசுவின் போதனைகளையும் அவருக்கு எடுத்து கூறினார். இதனை கேட்க, கேட்க நீலகண்டன் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவர் கிறிஸ்தவத்தை தழுவ முடிவு செய்தார்.

அதன்படி 1745ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் இப்போதைய நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் நீலகண்டன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மதம் மாறினார். அதன்பிறகு அவரது பெயர் தேவசகாயம் என அழைக்கப்பட்டது அவரது மனைவியும் பெயரை ஞானப்பூ என மாற்றி கொண்டார்.

கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர் தேவசகாயமும், அவரது மனைவியும் ஏழைகளின் வாழ்வு முன்னேறவும், சாதிய கொடுமைகளை கண்டித்தும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.

தேவசகாயத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த மன்னர் தரப்பினர் அவரை அழிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பதவிகள் பறிக்கப்பட்டன. 1749ம் ஆண்டு தேவசகாயம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை கொன்று விட முடிவு செய்து ஊர், ஊராக அழைத்து செல்லப்பட்டார். 1752ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைக்கு அவரை அழைத்து சென்ற வீரர்கள் அங்கு வைத்து அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். தேவசகாயத்தின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்தது. பின்னர் அவரது உடலை வீரர்கள் பாறையில் இருந்து உருட்டி விட்டனர்.

தேவசகாயத்தின் உடலில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்து சேகரித்த கிறிஸ்தவர்கள், அதனை கோட்டார் சவேரியார் பேராலயத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆலய பீடத்தின் முன்பு அவை அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்தாலும் அவர் தன்னை தேடி வரும் மக்களின் இன்னல் போக்க இறைவனிடம் வேண்டி அவர்கள் கேட்ட வரங்களை பெற்று கொடுத்தார். இதனால் தேவசகாயம் புகழும், அவரது புதுமைகளும் பலராலும் பரவசத்துடன் பேசப்பட்டது.

அன்று முதல் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று போப்பாண்டவருக்கு கோரிக்கை விடப்பட்டது. அதன்படி முதலில் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட தேவசகாயம், வருகிற 15ந் தேதி வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நடக்கும் விழாவில் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார்.

இந்தியாவில் இருந்து இதுவரை புனிதராக அறிவிக்கப்பட்ட யாரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு புனிதர் பட்டம் பெறவில்லை.

ஆனால் தேவசகயாம் மட்டும் குடும்ப வாழ்வில் இருந்து இறைப்பணிக்கு திரும்பி இப்போது புனிதராகவும் உயர்த்தப்பட்டு உள்ளார். இதனால் அவர் இந்தியாவின் முதல் இல்லற புனிதர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தேவசகாயம் புனிதர்பட்டம் பெற்றமைக்கான நன்றி பெருவிழா வருகிற ஜுன் மாதம் 5-ந்தேதி அவர் கொல்லப்பட்ட காற்றாடி மலையில் வைத்து நடக்க உள்ளது.

இந்த விழாவில் கர்டினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இதையும் படிக்கலாம்…
குபேரனுக்கு விரதம் இருந்து யந்திர வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.