இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் சுகாதாரத்துறை அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி கொழும்பில் கையளிக்கப்பட்டது.
இம்மருத்துவப்பொருட்கள் அடங்கிய தொகுதி இந்தியக் கடற்படைக் கப்பல் கரியால் மூலமாக கொண்டுவரப்பட்டதுடன் பேராதனை போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை துரிதமாக இலங்கைக்கு விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டமையானது இலங்கைக்கும் அந்நாட்டு மக்களின் நலன்களுக்கும் இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தினை நிரூபிக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
2. மேலும், சிசெல்ஸுக்காக இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட அலை சவாரி படகொன்றும் இந்தியக் கடற்படைக் கப்பல் கரியாலில் தற்போது ஏற்றப்பட்டுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த விடயங்களை கையாள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் இரு பாதுகாப்பு படைகளினதும் ஒன்றிணைவு ஆகியவற்றை இச்செயற்பாடுகள் பிரதிபலிக்கின்றன.
3. இதற்கு மேலதிகமாக, கரியால் கப்பல் மூலமாக இரு அம்புலன்ஸ் வாகனங்களும் மாலைதீவுகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள மூன்று பங்காளி நாடுகளின் பரந்த தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக கரியால் கப்பலை சேவையில் ஈடுபடுத்தியமை “பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்” என்ற இந்தியாவின் சாகர் கோட்பாட்டினை எடுத்தியம்புவதாக அமைகின்றது. அத்துடன் பிராந்தியத்தில் உள்ள பங்காளி நாடுகளின் தேவைகளை தனியாகவும் ஏனைய நாடுகளின் பங்களிப்புடனும் நிவர்த்தி செய்வதில் இந்தியாவின் அர்ப்பணிப்பினையும் இது சுட்டிக்காட்டுகின்றது.
4. இந்து சமுத்திர பிராந்தியத்தில் முதலில் பதிலளித்து செயற்படும் நாடாக இந்தியா பரவலாக கருதப்படுகின்றது. 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் எம்டி நியூ டயமன்ட் மற்றும் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் குறித்த அனர்த்தங்கள் ஏற்பட்டபோது இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோரக் காவற்படைக்கு சொந்தமான கலங்கள் உடனடியாகவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை மூலமாக இலங்கையின் கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகள் தணிக்கப்பட்டமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். அத்துடன் 2017 மேயில் இலங்கையில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கின்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படையினர் உடனடியாக வருகைதந்திருந்ததுடன், கொவிட்-19 பெருநோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 2021 ஆகஸ்ட் மாதம் 100 தொன்கள் திரவ நிலை ஒட்சிசனையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
04 மே 2022