இந்த நிதியாண்டில் உர மானியம் ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் உர மானியம் ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

உரங்கள் நிலவரம் குறித்து, மாநில வேளாண் அமைச்சர்களுடன், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

மத்திய அரசு மேற்கொண்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால், இந்த காரீப் பருவத்துக்கு தேவையான யூரியா, டிஏபி மற்றும் என்பிகே உரங்கள் தேவையை விட அதிகளவில் நம்மிடம் இருப்பில் உள்ளன. அதனால் உரங்கள் கிடைப்பது பற்றிய சரியான தகவல்களை விவசாயிகளுக்கு மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும். உரங்கள் இருப்பு குறித்து தவறான தகவல்கள் விவசாயிகளிடம் பரவி பீதியான சூழல் ஏற்படாமல் மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சந்தையில் எவ்வளவு உரம் கிடைக்கிறது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு உரம் தேவைப்படுகிறது என்பதை மாநிலங்கள் அறிந்திருக்க வேண்டும். கள்ள சந்தை போன்ற முறைகேடுகளை தவிர்க்க, ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு உரம் வாங்குகின்றனர் என்பதையும் மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும். உரங்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரங்கள் பயன்பாட்டில் தற்போதுள்ள நடைமுறைகளை விவசாயிகள் அறியும்படி செய்ய வேண்டும். நானோ யூரியா பயன்பாடு, ஆர்கானிக் விவசாய முறைகள் போன்றவற்றை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

கரோனா தொற்றுக்கு இடையே, உரங்களுக்கான மூலப் பொருட்களின் விலை, சர்வதேச அளவில் அதிகரித்தாலும், மானியத்தை அதிகரித்து உரங்களின் விலைகள் உயராமல் மத்திய அரசு சமாளித்துள்ளது. டிஏபி உர மூட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.1,650- ஆக உள்ளது. இதை ரூ.2,501 ஆக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு மானியத்தைவிட 50 சதவீதம் அதிகம்.

இந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும். கடந்த நிதியாண்டில் உர மானியத்தின் மதிப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. உரங்களை சரிவிகித அடிப்படையில் பயன்படுத்துவதற்கு நாம் திட்டமிட வேண்டும். இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.