ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறையில் 4 போலீஸார் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் 10 காவல் நிலைய பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜோத்பூரின் ஜலோரி கேட் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகுந்த் பிஸ்ஸாவின் சிலை உள்ளது. இச்சிலைக்கு அருகில் ரம்ஜானை முன்னிட்டு சிறுபான்மை சமூகத்தினர் நேற்று முன்தினம் இரவு தங்கள் மதக் கொடியை கட்டியுள்ளனர். அப்போது, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த காவிக் கொடி அகற்றப்பட்டதாக சிலர் ஆட்சேபம் தெரிவித்ததில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இது, இரு சமூகத்தினர் இடையிலான மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியதில் 4 போலீஸார் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறையாளர்களை விரட்டினர்.
இந்நிலையில் ஜோத்பூரின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் கல்வீச்சு, வாகனங்களை சேதப்படுத்துதல் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இப்பகுதிகளில் போலீஸார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து ஜோத்பூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வதந்தி பரவுவதை தடுக்க இன்டெர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.
என்றாலும் பதற்றம் நீடிப்பதால் ஜோத்பூரின் 10 காவல் நிலைய பகுதிகளில் இன்று (மே 4) நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் வேண்டுகோள்
ஜோத்பூரின் அன்பு மற்றும் சகோதரத்துவ பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் நேற்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் 2 அமைச்சர்கள் மற்றும் 2 உயரதிகாரிகளை அவர் ஜோத்பூருக்கு அனுப்பி வைத்தார்.
மாநில சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை இயக்குநர் மற்றும் பிற அதிகாரிகளிடம் முதல்வர் அசோக் கெலாட் ஆலோசனை நடத்தினார். இதில் ஜோத்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு மோதல் சம்பவம்
ராஜஸ்தானில் நேற்று ஜோத்பூர் வன்முறையை தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் நாகவுர் பகுதியில் இரு முஸ்லிம் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும்போது இவ்விரு குழுக்களும் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. வாக்குவாதம் முற்றியதில் மோதல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டன. தகவல் அறிந்த போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் அங்கு அமைதியை ஏற்படுத்தினர்.