லலித்பூர்: உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஏற்கனவே 4 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், புகார் அளிக்க சென்ற சிறுமியை இஸ்பெக்டரும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் மீது கூட்டு பலாத்கார வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் பாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, அதேபகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் போபாலுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பாலி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர், சிறுமியை தனியாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.அதன்பின் குற்றம்சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், 4 இளைஞர்கள் மட்டுமின்றி, இன்ஸ்பெக்டரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விபரத்தை அவர்களிடம் சிறுமி தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து லலித்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அவர் டிஎஸ்பி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிட்டார். முழு விசாரணைக்கு பின்னர் பாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலக்தாரி சரோஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பதை அறிக்கையாக சமர்பித்தனர். அதையடுத்து இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது கூட்டு பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் நிகில் பதக் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வோம். ஒரு குற்றவாளியிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.