ஐதராபாத்,
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்திலும் மிகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது.
தலைநகர் ஐதராபாத்திலும் வெப்பம் மிக அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென கனமழை கொட்டியது. பலத்த காற்று மற்றும் மின்னலுடன் பெய்த மழையால் ஐதராபாத்தில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
இதனால், தெருக்களில் சிறுவர்கள் ரப்பர் படகுகளில் மகிழ்ச்சியாக வலம் வந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கல பதார் மற்றும் யாகுட்புரா ஆகிய மாவட்டங்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியது. பலத்த காற்றும் வீசியதால், மரங்களும் சில இடங்களில் வேரோடு சாய்ந்தது. இதனால், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.