புது டில்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமரிடம் பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டும் போது “ஓ மை காட்.. அது எப்படி நடந்தது என கேட்கிறேன்.” என கூறும் வீடியோ இன்று டிரெண்டானது.
பத்திகையாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மோடி அவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சியினர் அவ்வீடியோவை பகிர்ந்தனர். ஆனால் தங்களை நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என பத்திரிகையாளர்கள் கூறியதை கேட்டே பிரதமர் அவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மே 2 அன்று மூன்று நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றார். முதற்கட்டமாக ஜெர்மனி, டென்மார்க் பயணங்களை முடித்தார். இன்று இந்தியா – நார்டிக் மாநாட்டில் பங்கேற்று சுவீடன், ஐஸ்லாந்து உள்ளிட்ட பிரதமர்களையும் சந்தித்து பேசினார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்துகிறார். பின்னர் பாரிசிலிருந்து டில்லி திரும்புகிறார்.
இந்நிலையில் ஜெர்மனியில் பிரதமர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பதற்றமானதாக ஒரு வீடியோ வைரலானது. அரங்கிலிருந்து வெளிவரும் பிரதமரிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டுகின்றனர். அவர் “ஓ மை காட்… அது எப்படி நடந்தது என கேட்கிறேன்” என கூறிவிட்டு புறப்பட்டார்.
இந்த துணுக்கை பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பினர். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. செய்தியாளர்கள் தங்களை நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என கூறியுள்ளனர். அதனை கேட்டே சங்கடத்துடன் பிரதமர் அவ்வாறு கூறியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Advertisement