கடலூர்: `பணி நிரந்தரம் செய்யுங்கள்’ – இரவிலும் போராடும் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.1,500 சம்பளம் என்ற அடிப்படையில் 205 பேர் தொகுப்பு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அதையடுத்து 2012-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது. அதன்பிறகும் அந்த ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் தற்போது அவர்களுக்கு ரூ.5,000/- முதல் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அந்த ஊழியர்கள், கடந்த மாதம் 27-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஊழியர்கள்

அப்போது துணைவேந்தர் இல்லாததால் அவர்களை அழைத்துப் பேசிய பதிவாளர் சீதாராமன் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 8-வது நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஊழியர்கள், ”நாங்க 205 பேர் தொகுப்பு ஊழியர்களாக வேலை செய்கிறோம். 2010-ல் திமுக ஆட்சியில்தான் நாங்கள் பணியமர்த்தப்பட்டோம். சிண்டிகேட் விதிகளின்படி இரண்டு ஆண்டுகளில் எங்களை பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 12 வருடங்களாக எங்களை பணிநிரந்தரம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் 70% நியமனங்கள் சிண்டிகேட் விதிகளின்படிதான் நடந்திருக்கின்றன. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக்கொண்டது. ஆனாலும் எங்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி எங்கள் பணிநிரந்தரத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தது பல்கலைக்கழக நிர்வாகம். தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்திருக்கும் நிலையில், எங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு வேலை கிடையாது என்று கூறுகிறார்கள். என்றாவது ஒருநாள் எங்களை பணிநிரந்தரம் செய்துவிடுவார்கள் என்றுதான் ரூ.1,500 சம்பளத்திற்கு வேலை செய்துவந்தோம். நிரந்தர பணியாளர்களுக்கு என்ன வேலையோ அதே வேலையைத்தான் நாங்களும் செய்துவந்தோம். ஆனால் தற்போது வரை 5,000/- ரூபாய்தான் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறோம். அதனால் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று 8-வது நாளாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.