கர்நாடக மாநிலத்தில் அதிக முறை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் எடியூரப்பா. கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்னர்,
எடியூரப்பா
ஆட்சியமைத்தார். இரண்டு ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்த நிலையில் கட்சிக்குள் அவருக்கு எதிராக கலகக்குரல்கள் உருவான நிலையில் வயதை காரணம் காட்டி அவரிடமிருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டு பசவராஜ் பொம்மையிடம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம்
பசவராஜ் பொம்மை
முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்றார். மிகக் குறுகிய காலத்தில்யேயே அவரது ஆட்சியில் ஊழல் புகார், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்ததால் பொது மக்கள் மட்டுமல்லாமல் பாஜக மூத்த தலைவர்களிடையேயும் அதிருப்தி உருவானது.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்தித்தால் பாஜக தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கட்சி மேலிடத்துக்கு பாஜக சீனியர்கள் தகவல் அளித்தனர். அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை சமாளித்து வெற்றி பெற வேண்டுமென்றால், புதுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குஜராத், டெல்லி மாநகராட்சியை போல் தேர்தலுக்கு முன்பு கர்நாடக பாஜகவிலும் மாற்றங்கள் நிகழும் என்று கூறினர்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான
அமித் ஷா
கர்நாடக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பசவராஜ் பொம்மை மீது எழுந்த அதிருப்தி குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால் தேர்தல் வரை எந்த மாற்றமும் இல்லை என அமித் ஷா தரப்பிலிருந்து பசவராஜ் பொம்மைக்கு தகவல் சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.
தலைமை மாற்றத்தைப் பற்றி வெளியாகும் கருத்துகள் குறித்து கவலைப்பட வேண்டாம், வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள், வளர்ச்சியை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுவோம், அதன் மூலம் வெற்றி பெறுவோம் என்று முதல்வருக்கு அமித்ஷா தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.