வயநாடு: கேரளாவில் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2 நாள்சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி வயநாடு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வயநாடு தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு தொடர்பான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தால் நடத்தப்படும் அங்கன்வாடி மையத்துக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்கிறார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார். வயநாட்டில் வெற்றி பெற்ற ராகுல், அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இரனியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், வயநாடு தொகுதியில் ஸ்மிருதி இரானியின் சுற்றுப் பயணம் அரசியல் ரீதியான யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.