கொரோனாவால் இறப்பு அதிகமா? மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு!| Dinamalar

புதுடில்லி:இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களை, சில அமைப்புகள் பல மடங்கு அதிகரித்து காட்டுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவில், 2020 ஜன., – 2021 டிச., வரை கொரோனாவால், 4.89 லட்சம் பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதை விட எட்டு மடங்கு அதிகமாக இறந்துள்ளதாக ‘லான்சட்’ எனப்படும் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனாவால், 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது. இதை மறுத்துள்ள மத்திய அரசு, 2020ம் ஆண்டின் பிறப்பு, இறப்பு விபரங்கள் அடங்கிய சிவில் பதிவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ உறுப்பினரும், கொரோனா தடுப்பு திட்டத் தலைவருமான வி.கே.பால் கூறியதாவது:சில அமைப்புகள், யூகத்தின் அடிப்படையில் மரண விபரங்களை வெளியிடுகின்றன. இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிவில் பதிவு அறிக்கைப்படி,தேசிய அளவில், 2019ல், 76.40 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது, 2020ல், 81.20 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் மரணங்கள் கொரோனாவால் தான் ஏற்பட்டது என கூற முடியாது. இறப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. 2020ல் கொரோனாவால், 1.49 லட்சம் பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.