சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு நாளும் அரசுத்துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது. 
ஏப்ரல் 29-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை இடம்பெற்றது. தன்பிறகு அரசு விடுமுறை வந்ததால் சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. 
விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இன்று சட்டசபை கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.
6-ந்தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7ந் தேதி திட்டம், வளர்ச்சி, பொதுசிறப்பு திட்ட செயலாக்கம் நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. 
மே 9, 10 ஆகிய 2 நாட்களில் முதல்-அமைச்சரின் துறையான போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தீயணைப்பு துறை, மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்தும் இதில் இடம் பெறுகிறது. 
போலீஸ் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது அவற்றுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது பதில் அளிப்பார். 
அன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன குறைகளை சுட்டிக்காட்டி பேசுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவாதத்தின் இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.