வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹசன்பூர்:பீஹாரில், சஹர்சா செல்லும் புறநகர் ரயில் வழியில் உள்ள ஸ்டேஷனில் நின்றது. அந்த சமயத்தில் இன்ஜின் உதவி டிரைவர் மது குடிக்க சென்றதால், ரயில் கிளம்ப ஒரு மணி நேரம் தாமதமானது.
பீஹாரின், சமஸ்திபூரில் இருந்து சஹர்சா செல்லும் புறநகர் ரயில், நேற்று முன்தினம் மாலையில், வழியில் உள்ள ஒரு ஸ்டேஷனில் இரு நிமிடம் நிற்க வேண்டும். ஆனால், மற்றொரு ரயில் ‘கிராசிங்’ இருந்ததால், கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயில் இன்ஜின் உதவி டிரைவர் கரம்வீர் பிரசாத் யாதவ், சிறிது நேரத்தில் வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு கீழிறங்கி சென்றார்.
ஆனால், ஒரு மணி நேரம் ஆகியும் அவர் திரும்ப வராததால் ரயில் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணியர், அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். பின், அதே ரயிலில் பயணித்த மற்றொரு இன்ஜின் டிரைவர் உதவியுடன், ரயில் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே, மாயமான உதவி டிரைவரை, மது போதையில் ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். மதுவிலக்கு அமலில் உள்ள பீஹாரில், இன்ஜின் டிரைவருக்கு மது எங்கிருந்து கிடைத்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement