சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் தளம் இலவசமாகத்தான் இருக்கும் ஆனால் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களின் பெயர்களால் அறியப்பட்ட எலான் மஸ்க், இப்போதெல்லாம் ட்விட்டர் உரிமையாளர் என்றே பெரிதும் அறியப்படுகிறார். காரணம், ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியுள்ளதே. 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் பல அறிவிப்புகளை நாள்தோறும் எலான் மஸ்க் அறிவித்துவருகிறார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ட்விட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போதும் இலவசமாகத் தான் இருக்கும். ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து ட்விட்டரைப் பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் சூறாவளி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த மாதம் முதலே எலான் மஸ்க் சூசகமாகத் தெரிவித்துவந்தார். புதிய அம்சங்களை ட்விட்டரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். குறிப்பாக எடிட் பட்டன், அனைவருக்கும் வெரிஃபிகேஷன், ஓப்பன் அல்காரிதம் என்று பல விஷயங்களைப் பேசி வருகிறார். ட்விட்டர் ப்ளூ ப்ரீமியம் சந்தா சேவைக் கட்டணத்தைக் குறைப்பதைப் பற்றியும் பேசியிருந்தார். “ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் தேவையா” என்று அவர் நடத்திய கருத்துக் கணிப்பு தான் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பானது.
கடந்த வாரம் மெட் காலே நிகழ்ச்சியில் நடந்த விழாவில் பேசிய எலான் மஸ்க், “ட்வீட்கள் எப்படி புரோமோட் அல்லது டிமோட் செய்யப்படுகின்றன என்ற மென்பொருள் பற்றி பொதுவெளியில் விமர்சனத்துக்கு விட வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.