புதுச்சேரி: சுட்டெரித்து வரும் கோடை வெயிலால் மனிதர்களே தகிக்கும் சூழலில் விலங்குகளை கதறி வெயிலில் இருந்து பாதுகாக்க அவற்றிற்கு பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது புதுச்சேரி மாநில வனத்துறை. புதுச்சேரி சுற்றுவட்டாரங்களில் விபத்துகளில் சிக்கி, காயமடையும் விலங்குகள் மற்றும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்படும் விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம். இங்கு மான், கிளி, மலைப்பாம்பு, ஆமை உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாக்க தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிக்காய், கீரைகள் மற்றும் காய்கறி கூட்டு உள்ளிட்டவை குளிர்ச்சியான இயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. முள் எலிகளுக்கு கோழி இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. நட்சத்திர ஆமைகள் மற்றும் மலைப்பாம்புகள் மேல் குளிர்ந்த தண்ணீர் தெளிக்கப்படுகிறது. வனத்துறையினரின் நடவடிக்கையால் கொளுத்தும் வெயிலிலும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கும் விலங்குகள் ஆரோக்கியமாக இருப்பதாக பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.