சென்னை; நடப்பாண்டு தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 170 நாடுகள் முன்பதிவு செய்துள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை தமிழகஅரசு பெற்றுள்ளது. உலக அளவில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு போர் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவில், அதுவும் நமது தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வரும் ஜூலை மாதம் 28ந்தேதி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இந்தபோட்டியில் பங்கேற்க உலக நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. இதுவரை 170க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அரசு சார்பில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி ஷாலினி ஆகியோர் ஒரே போட்டியில் பங்கேற்க உள்ளனர். இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த போட்டியில் இந்திய அணி நான்கு குழுக்களாக பங்கேற்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு விரைவில் பயிற்சி அளிக்கும் பணி தொடங்க உள்ளது.
மேலும், பல நாடுகள் இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம், அகில இந்தியா செஸ் கூட்டமைப்பும், உலக செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பும் சேர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
செஸ் ஒலிம்பியாட்: 20 பேர் கொண்ட அணியை அறிவித்தது அகில இந்திய செஸ் பெடரேசன்…