விழுப்புரத்தில் தந்தை உயிரோடு இருக்கும்போது, தாய் விதவை பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அவர்களது மகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பட்டியலில் இருந்து நீக்கி தருமாறு கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பெண்ணை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவரஞ்சினி (வயது 22). கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு சென்ற சிவரஞ்சனி, தனது தந்தை வெங்கடேசன் உயிரோடு இருக்கும்போதே தாய் சரிதா விதவை பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறி, `எனது தந்தை உயிரோடு இருக்கும்போது எப்படி தாயை விதவை பட்டியலில் சேர்த்தீர்கள்’ என்று அங்கிருந்தவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து “இதை நீக்கம் செய்து, மாற்றி தர வேண்டும்” என கிராமசபை கூட்டத்தில் மயிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கோணமங்கலம் ஊராட்சித் தலைவர் சுமதி முன்னிலையில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க… `வாதிட எதுவுமில்லையெனில் நாங்களே பேரறிவாளனை விடுவிக்கிறோம்’- உச்சநீதிமன்றம் அதிரடி
இந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் (தற்போதைய தலைவர் சுமதி என்பவரின் தந்தை) சுந்தரமூர்த்தி, கேள்வி எழுப்பிய சிவரஞ்சினியை தனது ஆதரவாளர்களுடன் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை தாக்கி அவர் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியதாக சிவரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அன்றைய தினமே மயிலம் காவல் நிலையத்தில் அவர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் தற்போது வரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை பொதுவெளியில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் புகார் மனு அளித்திருக்கிறார் சிவரஞ்சனி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM