திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர்திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பூதலபட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆசிர்வாதம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.இதையடுத்து காரில் இருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பி.என். பாளையத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் முரளி (வயது 40), பூங்காவனம் மகன் சேகர் (39), கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சிவ ரெட்டி (32), இந்துவா வெங்கடசுப்பா (32), புல்லேறி கோபி (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏலூர் தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டரிலிருந்து 221 ரேம்கள், 95 செயலிகள், 5 கம்ப்யூட்டர்கள், 3 சிபியுக்கள் திருடி சென்று தெரியவந்தது.
மற்றும் பூதலபட்டு தனியார் கல்லூரியில் 50 கம்ப்யூட்டர்கள், 95 ரேம்கள், 95 செயலிகள், 30 ஹாட் டிஸ்க் துகள், 1 மதர்போர்டு மற்றும் சித்தூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர்கள், மதர்போர்டுகள் மற்றும் முடிவேடு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர்களில் உள்ள 83 ரேம்கள், செயலிகள் மற்றும் கடப்பா மாவட்டம் சி.கே.டின்னே தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 26 ரேம்கள், 66 செயலிகள் மற்றும் மண்ணூர் தனியார் கல்லூரியில் 220 ரேம்கள் செயலிகள் என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ 3 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் ஓசூர், நாட்டறம்பள்ளி, கடலூரில் கல்லூரிகளில் கைவரிசை காட்டி கம்ப்யூட்டர் பாகங்கள் திருடி சென்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள், ரூ 1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.