சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 8.60 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக் கூடங்களில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கரோனா பரவலால் கடந்த ஆண்டு (2020-21) பொதுத் தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. பள்ளிகள் திறப்பு தாமதம் ஆனதால், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 முதல் 40 சதவீதம் வரை பாடத் திட்டம் குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதற்கேற்ப திருப்புதல் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்.25 முதல் மே 2-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்கி 28-ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 28,353 தனித் தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 73 சிறை கைதிகள் ஆகியோரும் அடங்குவர்.
இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்கு 134, சிறைவாசிகளுக்கு 9 தேர்வு மையங்கள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 167 மையங்களில் 46,785 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்கிடையே பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 44,985 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர 279 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். முறைகேடுகளை தடுக்க 4,291 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாக்களால் எழுதக் கூடாது.
பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்வது, விடைத்தாள் மாற்றம் செய்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 3 ஆண்டுகள் தேர்வு எழுததடை விதிக்கப்படும். பள்ளி நிர்வாகம் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும். முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்த5 நிமிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, சுயவிவரங்களை சரிபார்க்கவும் தரப்படும். அதன்பிறகு காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும்.
கரோனா தடுப்பு முறை
தேர்வு மையங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை. அதேநேரம் தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் பள்ளிக்கல்வியில் எழுத உள்ள முதல் பொதுத் தேர்வு இது. கரோனா பரவலால் முந்தைய ஆண்டுகளில் இவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 படித்தபோது, தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.