Courtesy: ஜெரா
இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியிருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் இன, மத பேதம் கடந்து இலங்கை வாழ் இனங்கள் எதிர்கொள்ளும் பேரிடர் இது.
போர், கலவரங்கள், போன்றவற்றை இத்தீவு இடர்களாக எதிர்கொண்ட போதிலும் அவை தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தின.
இம்முறை ஏற்பட்டிருக்குப் இப்பொருளாதாரப் பேரிடரானது அனைத்துத் தரப்பினரையும் மிக மோசமாகத் தாக்கியிருக்கின்றது. இதிலிருந்து மீ்ள்வதற்கே பல ஆண்டுகள் எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
இந்தப் பொருளாதாரப் பேரிடரை, சிங்களவர்கள் தாமாகவே தேடிக்கொண்டனர். அதவாது ராஜபக்சவினர் குறித்து 2009ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர்.
தமிழர் – முஸ்லிம்கள் மீதான இனவாதத்தை வளர்த்து, அதன் விளைவாக எழும் வன்முறைகளை அரசியல் முதலீடாகப் பயன்படுத்துவதில்தான் ராஜபக்சவினரின் அரசியல் உள்ளது என வலியுறுத்தியுள்ளனர்.
இனவாத முதலீட்டில் இலங்கை வாழ் சமூகங்கள் அடிபட்டுக்கொண்டிருக்க ராஜபக்சவினர் தம் குடும்பத்தும், ஏழேழு தலைமுறைக்குமான சொத்துப்பத்துக்களை இந்நாட்டிலிருந்து திருடிச்செல்வர் என்பதும் தமிழர் தரப்பிலிருந்து கூறப்பட்ட தீர்க்கதரிசனமாகும்.
“கெடுகுடி சொற்கேளாது” என்ற கணக்கில் செயற்பட்ட சிங்களவர்கள் 2019ஆம் ஆண்டில் மீளவும் ராஜபக்சவினருக்கு செங்கம்பளம் விரித்தனர்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைப்பது, வடக்கு, கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழர்களது வாழிடங்களை ஆக்கிரமிப்பது, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கலை துரிதப்படுத்துவது, தனித்த சிங்கள அரசை அமைப்பது போன்ற நோக்கங்களை முன்வைத்தே இத்தகைய வரவேற்பை ராஜபக்சவினருக்கு வழங்கினர்.
ராஜபக்சவினர் கடன்பெற்று நடத்திய போரினால் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நெருக்கடி குறித்தோ, அவர்கள் செய்த ஊழல்கள் குறித்தோ சிங்களவர்கள் அக்கறைப்படவில்லை.
தம் இனத்தை முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் அமானுஸ்யம் பொருந்தியதொரு அரசன் தேவை என்ற கணக்கில் கோட்டபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் தெரிவுசெய்தனர்.
69 லட்சம் தனி சிங்கள வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச, தன்னைத் தனிப் பெரும்பான்மையினருக்கான ஜனாதிபதி எனவும், அவர்களது கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளிப்பதே தன் சேவை எனவும் வரித்துக்கொண்டார்.
தன் வாக்காளர்களை சுவாரஸ்யப்படுத்தும் பல்வேறு கேலிக்கைகளிலும் ஈடுபட்டார். நாட்டு மக்களே திக்குமுக்காடிப் போகுமளவிற்குப் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் அவரால் தான் நினைத்ததைப்போல நாட்டைக்கொண்டு செல்ல முடியவில்லை. 2006 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக செய்த பழிகள் அத்தனையும் வினைப்பயனாக வந்துநின்றது.
“கொடிய பயங்கரவாதத்தையே வெற்றிகொண்ட எமக்கு கொரோனாவை ஒழிப்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல” என்ற அதிகார மமதையோடு வைரஸோடு பொருதினர்.
சர்வதேச சுகாதார தாபனம், உலக வங்கி, நியூசிலாந்து மாதிரியான நாடுகள் விடுத்த முன்னெச்சரிக்கை குறித்து கவனமெடுக்கவில்லை.
இராணுவத்தின் புஜபலத்தைக் கொண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தீவிரம் காட்டினர்.
மக்களைக் கொரோனாவின் பக்கம் திருப்பிவிட்டுத் தம் வழமையான அரசியலை முன்னெடுத்தனர் ராஜபக்சவினர்.
போர் நடத்திய காலம் தொட்டு வாங்கி கடன்களையும், வீங்கிப்பெருத்த வட்டியையும் கட்டுவதற்கு சீனாவிடம், இந்தியாவிடம் கடனுக்கு மேல் கடன் வாங்கினர்.
வாங்கிய கடனுக்குப் பதிலீடாக இலங்கையின் நாலாதிசைகளும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன. மக்களின் கருத்தின்றியே கொழும்பு துறைமுக நகரச் சட்டமூலத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றிக்கொடுத்தனர்.
வடக்கில் வளமிகு இடங்களை இந்தியாவுக்குத் தாரைவார்த்தனர். கொள்ளையடிப்புக்குப் பேர்போனவர்களைக் கொண்டு நாட்டை நிர்வகித்தனர்.
உலகம் எச்சரித்ததைப் போலவே இதன் விளைவு மிகமோசமானதாக மாறியது.
தவறான நிர்வாக நடத்தைகளும், ஊழல் மிகுந்த பொருளாதார கொள்கைகளும், கொமிசன் அடிப்பதற்கான துரித அபிவிருத்திப் பணிகளும் இதற்கு வழிவகுத்த காரணிகள். மறுபுறத்தில் கடன் பொறி இறுகத் தொடங்கியது.
கடனை வாரிவாரி வழங்கிய நாடுகள் கட்டளை போடத்தொடங்கின. தனிச் சிங்கள ராச்சியத்தைக் கட்டமைக்க வந்த அரசரோ, எந்த நூலுக்கு எப்படி ஆடுவது என்பதைத் தெரியாதளவுக்கு குழம்பிப்போனார். உட்புற- வெளிப்புற அழுத்தங்களால் நிலைதடுமாறிப்போனார்.
எரிவாயு, எரிபொருள், பால்மா, மருந்துகள் என அத்தியாவசியப் பொருட்கள் அனைத்திற்கும் தட்டுப்பாடு தலைவிரித்தாடத் தொடங்கியது.
ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சொப்பிங் பை அளவிற்கே பொருட்கள் வாங்குமளவிற்கு பணப் பெறுமதியிழப்பு ஏற்பட்டது. அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் காலம் போய், மக்களிடம் அரசு நிவாரணம் கேட்கும் காலமும் வந்தது.
இந்நிலையில்தான், இவையெதையும் தாங்கிக்கொள்ளாத, நகரவாசிகளாக சிங்கள மேற்தட்டுவர்க்கத்தினர் வீதிக்கு வந்திருக்கின்றனர்.
எவ்வகையிலும் ஜனநாயக விழுமியங்களை மீறாது ராஜபக்சவினருக்கு எதிரான கோசங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
ராஜபக்சவினர் நாட்டை சீரழித்துவிட்டனர், பொருளாதார அழிவை ஏற்படுத்திவிட்டனர், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நாட்டை விற்றுவிட்டனர், குடும்பமாக இணைந்து ஊழல்செய்து நாட்டை சூறையாடிவிட்டனர் எனவே இவர்கள் பதவியை விட்டு விலகவேண்டும் என்கிற கோசங்களை முன்வைத்துப் போராடுகின்றனர்.
2019ஆம் ஆண்டு வரைக்கும் இத்தகைய குற்றங்களில் ராஜபக்சவினர் ஈடுபடவில்லை போலவும், அதற்குப் பின்னரே இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் போலவும் இந்தச் கோசங்களை முன்வைக்கும் போராட்டக்காரர்கள், 2005 ஆம் ஆண்டிலிருந்தே ராஜபக்சவினரின் தீவிர பக்தர்கள் என்பதை மறந்துவிடுகின்றனர்.
உண்மையில் இன்று இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார இடரின் விதை “ஹெல்பிங் அம்பாந்தோட்டை” யில் இடப்பட்டது. தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொல்வதற்கு உலக நாடுகளிடம் கோடிகோடியாய் கடன்பெற்றபோது இடப்பட்டது.
போரின் பின்னர் நாட்டை துரித அபிவிருத்தி செய்கிறோம் என்றபோது இடப்பட்டது. அதுவே இப்போது வளர்ந்து பெருவிரூட்சமாகி நிற்கிறது.
அவ்வாறு கடன் வாங்கியபோது, வாங்கிய கடனில் கொள்ளையடித்தபோது பாற்சோறு உண்டு களித்த தரப்பினர் இன்று தமக்குப் பிரச்சினையென்றபோதுதான் விழித்திருக்கின்றனர். ராஜபக்சவினருக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர்.
இந்தப் போராட்டங்களில் தமிழர்களை ஈடுபடுமாறு கோருவதும் அபத்தமிக்கது.
ராஜபக்சவினரின் அத்தனை முகங்களையும் தமிழர்கள் நேரில் பார்த்திருக்கின்றனர். “இப்போது எங்கள் கைகள் மட்டும்தான் கட்டப்பட்டிருக்கிறது, கண்களல்ல” என சமாதானம் பேசிய ராஜபக்சவினரின் படைகளையும் கடந்திருக்கின்றனர்.
இந்த அனுபவங்களிலிருந்து பெற்ற பாடத்தின் விளைவைத்தான் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்தே ராஜபக்சக்களின் ஆதரவாளர்களுக்கு புகட்டிவருகின்றனர்.
அப்போதெல்லாம் அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளாத தரப்பினர், இன்று திடீர் ஞானம் பெற்றவர்களாக வீதிக்கு வந்திருப்பதும், அதற்குத் தமிழர்களின் ஆதரவு கோருவதும் விந்தையானது.
ராஜபக்சவினரின் அத்தனை அட்டூழியங்களுக்கு எதிராகவும் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
நிலஅபகரிப்பு, வழிபாட்டிட அபகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், காணாலாக்கப்படுதல், அரசியல் கைதிகளாக சிறையில் தடுத்துவைத்திருத்தல், ஊழல் எனப் பல்வேறு விடயங்களுக்கு எதிராகவும் தமிழர்கள் குரல்கொடுத்துவருகின்றனர்.
அப்போராட்டங்களின்போது அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் எண்ணிக்கையிலடங்காதது. அந்நேரங்களில் எல்லாம் சுற்றுலா வந்தாவது, ஒரு ஆதரவுக் கரத்தைக் கொடுத்துவிட்டு செல்லாத தரப்பொன்று எந்த எண்ணத்தின் அடிப்படையில் தமிழர்களின் ஆதரவைக் கோருகின்றது என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
இந்தப் போராட்டங்களில் சில இடங்களில் அரசியலமைப்பு மாற்றம் கோருவதையும் அவதானிக்கமுடிகின்றது. அதவாது ராஜபக்சக்கள் போன்ற இனவாதிகளது அரசியல் வரவிற்கும், இருப்பிற்கும் இலங்கையில் உருவாக்கிவைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பே காரணம்.
அதில் ஏனைய இனங்களையும் மதிக்கக்கூடிய, அவர்தம் உரிமையை சமநிலைப்படுத்தக்கூடிய புதிய முறைமைகள் உள்ளடக்கி, இலங்கையின் அரசியலுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.
இவ்விடயம் இதயச்சுத்தியுடன் முன்வைக்கப்படுமாயின், கூட்டு சிங்கள மனோநிலையின் அடிப்டையில் கருத்துருவாக்கமாக நிகழுமாயின் அது வரவேற்கத்தக்கதே.
ஆனால் இலங்கையின் அரசியலானது மையம் கொள்ளும் இடமாக பௌத்த மகாசங்கங்களே காணப்படுகின்றன. இவை காலாகாலமாக பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்திய அரசாட்சியையே விரும்புகின்றன.
அச்சங்கத்தாரின் விருப்பமின்றி இலங்கை அரசியலில் எத்தகைய மாற்றமும் நிகழாது. இப்போது கூட ராஜபக்சவினர் என்னசெய்யவேண்டும் என்பதை பௌத்த மகாசங்கத்தினரே தீர்மானிக்கின்றனர்.
ராஜபக்சவினரும் தமக்கு வாக்களித்த மக்களை விட சங்கத்தினருடன் பேசுவதையே விரும்புகின்றனர்.
இந்நிலையில் பௌத்த சங்கங்கங்களிடம் அனுமதி பெறாத அரசியலமைப்பு முறைமை மாற்றம் எவ்வகையில் சாத்தியப்படும்?
எனவே ராஜபக்சவினரை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான போராட்டமானது, கோரும் – முன்வைக்கும் விடயங்களில் பல்வேறு தெளிவின்மைகள் காணப்படுகின்றன.
வெறுமனே அரசியல் அரங்கிலிருந்து ராஜபக்சவினரை அகற்றுவதன் மாத்திரம் இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார – அரசியல் இடர்களுக்குத் தீர்வுகாணமுடியாது.
ஒருவர் செய்யும் தவறுக்கு அவரை இடமாற்றிவிட்டால் போதும், அதுவே உச்ச தண்டனை என்கிற மனநிலையின் அடிப்படையில்தான் இலங்கையில் நடக்கும் குற்றங்களுக்கான தண்டனைகள் அணுகப்படுகின்றன.
ஆனால் குற்றவாளிகளுக்கு இருக்கும் பொறுப்புக்கூறல் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. அது நிகழாதவரைக்கும் இலங்கையில் அரசியலமைப்பு முறைமையில் மாற்றம் நிகழவும் வாய்ப்பில்லை.
எனவேதான் இதனைத் தெளிவாக விளங்கிக்கொண்ட தமிழர்கள் “கோ கோட்டா கமவிற்கு” செல்லாதிருக்கின்றனர்.