தமிழ் தொழிலாளர்களுக்கு தமிழ் நடிகர்கள் ஆதரவு தருவார்களா?

தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன. தமிழகத்தில் இருந்த ஒரே ஒரு அரசு பிலிம் சிட்டியை டைடல் பார்க் ஆக மாற்றிவிட்டார்கள். இப்போது அங்கு எந்த ஒரு ஸ்டுடியோவும் இல்லை.

தமிழக அரசு சார்பில் பையனூரில் திரைப்பட ஸ்டுடியோக்கள் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை சரிவர பயன்படுத்துவதில்லை. சென்னை வடபழனி பகுதியில் காலம் காலமாக இருந்த ஏவிஎம், பிரசாத் உள்ளிட்ட ஸ்டுடியோக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாறிவிட்டன. தற்போதைக்கு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் மட்டுமே தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன.

ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அவர்களது படங்களை ஐதராபாத்தில் தான் நடத்துகிறார்கள். அங்கு படப்பிடிப்பு நடத்துவதால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களையே பயன்படுத்துகிறார்கள். ஜுனியர் நடிகர்கள், நடிகைகள் கூட தெலுங்குத் திரையுலகத்திலிருந்தே அழைக்கப்படுகிறார்கள். இங்கிருந்து அங்கு செல்லும் தமிழ் கலைஞர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாக்களுக்கு மையமாக இருந்த சென்னையில் இப்போது ஓரிரு ஸ்டுடியோக்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் தொடர்ச்சியாக படப்பிடிப்புகள் நடைபெறுவதில்லை.

தமிழ் நடிகர்கள் நினைத்தால் இங்கேயே படப்பிடிப்புகளை நடத்தலாம். ஆனால், தங்கள் படங்களைப் பற்றிய செய்திகள் மீடியாக்களுக்கு போய்விடக் கூடாது, ரசிகர்கள் தங்களை வந்து தொந்தரவு செய்யக் கூடாது என்ற காரணத்திற்காக அவர்கள் தங்களது படப்பிடிப்புகளை ஐதராபாத்தில் நடத்துவதாக சில தொழிலாளர்கள் நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்த் திரைப்படங்கள் 75 சதவீதம் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தயாரிப்பாளர் சங்கங்களும், தொழிலாளர் சங்கங்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். அப்போது தான் இங்குள்ள தொழிலாளர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.