தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,
தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள ‘பட்டினப்பிரவேசம்’ பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வழக்கம் போல தொடர வேண்டும்.
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது வழக்கத்திற்கு மாறான, தேவையற்ற, நியாயமற்ற ஒன்று.
தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று தருமபுர ஆதீனம். இங்கு ஆண்டாண்டு காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி ஆன்மீக வரலற்றில் சிறப்பு மிக்கது.
ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களில் தமிழக அரசின் தலையீடு வீண் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.
ஆன்மீகம் சம்பந்தப்பட்டவற்றில் ஆதரவுக்குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்தாலே நல்லது.
எனவே தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையே தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.