"தோனியின் ஆலோசனையை கேட்டுக்கொள்"- இளம் வீரருக்கு தீபக் சாஹர் வழங்கிய அறிவுரை..!!

மும்பை,
15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 

சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சு சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக பவர்பிளே-வில் சென்னை அணி தொடக்க போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியது. ஒரு பக்கம் ரன்கள் போனாலும் சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி பந்துகளை நன்றாக ஸ்விங் செய்கிறார்.
இதனால் கடந்த சில போட்டிகளில் அவர் அதிக விக்கெட் வீழ்த்த தொடங்கியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அவர் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த நிலையில் தற்போது முகேஷ் சவுத்ரி சென்னை அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான தீபக் சாஹர் தனக்கு அறிவுரை வழங்கியது குறித்து பேசியுள்ளார். 2018 ஆண்டு முதல் சென்னை அணியின் பந்துவீச்சு நாயகனாக ஜொலித்தவர் தீபக் சாஹர். 
குறிப்பாக பவர்பிளே-வில் விக்கெட்களை வீழ்த்தும் திறமை கொண்ட இவரை  பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி ரூ.14 கோடி கொடுத்து தீபக் சாஹரை ஏலம் எடுத்தது.
இருப்பினும் இவர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது சென்னை அணிக்கு பெரும் இழப்பாகியது.
தீபக் சாஹரின் அறிவுரை குறித்து முகேஷ் சவுத்ரி கூறுகையில், ” தீபக் அற்புதமான பந்து வீச்சாளர். நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறேன், அவர் எனக்கு பல விஷயங்களை கற்று தருகிறார்.
சூழ்நிலையை உணர்ந்து எப்படி பந்து வீசுவது என்று சொல்லியிருக்கிறார். போட்டியின் ஆரம்ப காலக்கட்டத்தில் நான் நன்றாக வீசவில்லை. அப்போது தீபக் சாஹர் எனக்கு போன் செய்து  ஆலோசனை வழங்கினார்.
ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்த போது சாஹர் என்னை பாராட்டினார். குறிப்பாக தோனி கூறும் ஆலோசனையை கேள் என கூறினார். தீபக் சாஹரின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தன” என முகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.