போபால்: மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக கூறி இரண்டு பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில், பசுவைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்ற ெகாடுமையான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கே.மராவி கூறுகையில், ‘சிமாரியா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடியினர் பசுவை கொன்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 20 பேர் கும்பல், பழங்குடியினர் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கியது. கொடூரமான தாக்குதலில் பழங்குடியினர் இருவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ெதாடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரின் பெயர் தெரியவில்லை. மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம். உயிரிழந்தவரின் வீட்டில் சுமார் 12 கிலோ பசுவின் இறைச்சி கண்டெடுக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த புகார்தாரர் பிரஜேஷ் பாட்டி கூறுகையில், ‘அந்த கும்பல் சம்பத் பாட்டி மற்றும் தன்சா ஆகிய இரு பழங்குடியினரை கொடூரமாக தாக்கிக் கொன்றது. தடுக்க சென்ற என்னையும் தாக்கியது’ என்றார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜுன் சிங் ககோடியா கூறுகையில், ‘பழங்குடியினரின் வீட்டிற்குள் நுழைந்து இருவரை கொன்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் தர்ணாவில் ஈடுபட்டோம்’ என்றார்.