மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை அன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியின்போது, ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமரவை வைத்து பக்தர்கள் பல்லக்கை சுமந்து வீதியுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் தவறானது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் மடத்தில் இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ. பாலாஜி மே 2 ஆம் தேதி உத்தரவிட்டார்.
பட்டினப் பிரவேசத்துக்கு எதிராக திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 23-வது பிரிவின்படி மனித உரிமை மீறல் என காரணம் காட்டி, மே 22 அன்று நடைபெறவிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிகு ஆர்.டி.ஓ. தடை விதித்தார்.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, மதுரை ஆதீன கர்த்தர் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள கண்டனம் தெரிவித்ததோடு, எங்கள் உயிரைக் கொடுத்தாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்று கூறியதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
தருமபுரம் ஆதீனம் மடத்தின் நிகழ்ச்சிக்கு ஆளுநர் வந்ததால்தான் தமிழக அரசு தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடைவிதித்துள்ளது என்றும் தமிழக அரசு தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (மே 4) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஆதீனத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதாக கூறுகின்றனர். தோளில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடைபெற்றுவரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஆதீனத்தை ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது.
ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்
கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார்.
தமிழ்நாடு பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”