நாடாளுமன்றம் இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாக அமையும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன் மறுபுறம் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவி விலகினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டு அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமை ஏற்படும்.
இந்நிலையில், நேற்று மாலை முதல் நாடாளுமன்றத்தை சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு படையினரின் தீவிர பாகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இரும்புக் குழாய்களினால் வீதித் தடுப்புகள் வைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.