பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை வழக்கில் இதுவரை 20 பேர் கைது – கேரளா போலீஸ் தகவல்

பாலக்காடு,
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் படுகொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது  என்று கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சீனிவாசன்(45) கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது  என்று கேரள போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர், எஸ்.கே சீனிவாசனை கொலை செய்த 6 பேர் கொண்ட குழுவில் இருந்ததாக கூறப்படுகிறது.  கொலை செய்த கூட்டத்தை சேர்ந்த இருவர் இன்னும் கைது செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) இன் தொண்டர்கள் அல்லது அதைச் சார்ந்தவர்கள் ஆவர்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பி.எப்.ஐ தலைவர் சுபைர்(43) கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக,ஆர்.எஸ்.எஸ் தலைவர் சீனிவாசன் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுபைர் கொலை வழக்கில், இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆவர்.
இனி வரும் நாட்களில் மேற்கண்ட இரு வழக்குகளிலும் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இத்தகைய கொலைகளைத் தடுப்பது மிகவும் கடினம். இது ஒரு பெரிய அளவிலான வகுப்புவாதப் பிரச்சினையாக வெடிக்காமல் இருக்க, காவல்துறை எப்போதும் நடவடிக்கை எடுக்கிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 
இந்த அரசியல் படுகொலை சம்பவங்களுக்கு முன்னதாக, கடந்த டிசம்பரில், ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவரும், பாஜகவின் தலைவரும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.