உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி புகாரளிக்கச் சென்ற சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் பாலியில் வசிக்கும் நான்கு சிறுவர்கள், 13 வயது சிறுமியை ஏமாற்றி ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அந்தச் சிறுமியை மூன்று நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், நான்கு சிறுவர்களும் சிறுமியை லலித்பூரில் உள்ள பாலிக்கு அழைத்து வந்து, பாலிகாவல் நிலைய பொறுப்பதிகாரி திலக்தாரி சரோஜிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து காவல் நிலைய பொறுப்பாளர் சிறுமியை அவரது அத்தையுடன் குழந்தைகள் நல காப்பகத்திற்கு (Child Line Centre) அனுப்பி வைத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல் நிலையப் பொறுப்பாளர் சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக சிறுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர் சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சிறுமி மீண்டும் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு ஒரு ஆலோசனையின் போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். இதையடுத்து குழந்தைகள் நல காப்பகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் நிலையப் பொறுப்பாளர், சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். மேலும் காவல் நிலைய பொறுப்பாளர் திலக்தாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்ட்டப்பட்ட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 363 (கடத்தல்), 376 (கற்பழிப்பு), 376 பி, 120 பி (குற்றச் சதியில் ஈடுபடுதல்), பாலியல் (POCSO) மற்றும் SC/ST சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போதுவரை இந்த வழக்கு தொடர்பாக மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் மற்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
24 மணி நேரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அறிக்கை அளிக்குமாறு டிஐஜி உத்தரவிட்ட நிலையில் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM