பிரேத பரிசோதனையில் ’கொடுங்காயம்’ உறுதி – விக்னேஷ் மரணத்தில் அவிழுமா மர்ம முடிச்சுகள்?

விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூறாய்வு முடிவு அவருக்கு கொடுங்காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷிடம் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார். 
வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சமூம வலைதளங்களிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் லாக்-அப் மரணங்களுக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பிய நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.
image 
இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னேசின் உடற்கூறாய்வு முடிவு அவருக்கு கொடுங்காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. தலை, இடது கண், இடது கை, இடது தோள், வலது முதுகுபகுதி, இடுப்பில் சிராய்ப்பு என விக்னேஷ் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்ததையும், இரத்தக் கட்டுகள் இருந்ததையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இது தவிர முக்கியமாக, விக்னேசின் முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும், ஒரே ஒரு X Ray மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதும் பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. ஒரே ஒரு X ray எடுக்கப்பட்டதால் அதன்மூலம் முன்னங்கால் எலும்பு முறிவு கண்டறியப்பட்டுள்ளது. எலும்புமுறிவு கண்டறியப்பட்டது ஏன் முக்கியமானதெனில் எலும்புமுறிவு உடலின் ஒரு இடத்தில் கண்டறியப்பட்டாலும் அது “கொடுங்காயம்” என்றே குறிப்பிடப்படும்.
எனவே, விக்னேஷ் கொடுங்காயத்திற்கு உள்ளாகி இருப்பது தெளிவாகிறது. இது தவிர விக்னேஷ் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு உறுப்புகள் ரயாசான ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. அவை கிடைத்தவுடன் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.