பெங்களூரு: பெங்களூருவை உருவாக்கிய கெம்பே கவுடாவுக்கு ரூ.85 கோடி செலவில், 108 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட இருக்கிறது.
தற்போதைய பெங்களூருவை அடுத்துள்ள எலஹங்காவை ஆண்ட குறுநில மன்னர் கெம்பே கவுடா கிபி 1531-ம் ஆண்டு பெங்களூருவை உருவாக்கினார். அவரது நினைவை போற்றும் வகையில் பெங்களூருவில் உள்ள 191 வார்டுகளிலும் கெம்பே கவுடாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்துக்கு அருகே 23 ஏக்கர் பரப்பளவில் ரூ.85 கோடி செலவில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடாவுக்கு சிலை வைக்க கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு முடிவெடுத்தது. குஜராத்தில் 597 அடி சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் வஞ்சி சுத்தர் இந்த சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில் கெம்பே கவுடாவின் வாள் தயாரிக்கும் பணிகள் டெல்லியில் நடைபெற்றது.
4 ஆயிரம் கிலோ வாள்
அதன் பணிகள் முடிந்த நிலையில், 4 ஆயிரம் கிலோ எடையுள்ள வாள் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. 35 அடி உயரம் கொண்ட வாளை, கர்நாடக உயர்கல்வி அமைச்சரும், கெம்பே கவுடா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான அஸ்வத் நாராயண் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து வரவேற்றார்.
இதுகுறித்து அஷ்வத் நாராயண் கூறுகையில், ” கெம்பே கவுடா சிலை நிறுவப்பட இருக்கும் 23 ஏக்கர் பரப்பளவு பூங்கா தயாராக இருக்கிறது. புதுமையையும் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இந்த சிலை திகழும்” என்றார்.