திருப்பதி: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த உள்ளார். இதனையொட்டி திருப்பதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்காக திருப்பதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே. ரோஜா பார்வையிட்டார். அப்போது அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போதுதான் பெண்கள் மீது குற்றம் அதிகமாக நடந்தது. ஆனால், ஜெகன் முதல்வரான பின்னர் தேசிய குற்றப்பிரிவின் ஆய்வறிக்கையின்படி ஆந்திராவில் 3 சதவீதம் பெண்கள் மீதான குற்றங்கள் குறைந்துள்ளது. ஆயினும் சில மூர்க்கர்களால் பெண்கள் ஆங்காங்கே பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்ததும் இந்த அரசு அவர்களை உடனடியாக கைது செய்து தக்க தண்டனையையும் நீதிமன்றம் மூலம் பெற்று தருகிறது. இதற்கு குண்டூர் பி.டெக் மாணவி ரம்யா கொலை வழக்கே உதாரணமாகும். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சந்திரபாபு ஆட்சியில்தான் மின் கட்டணம், பஸ் கட்டணம் போன்றவை அதிகரிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஜெகன் அரசு பல்வேறு நலத்திட்டங்களால் ஏழை மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. இவ்வாறு ரோஜா கூறினார்.