வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் வீடு முன் அனுமன் சாலிசா பாட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுயேட்சை பெண் எம்.பி., ராணா நவ்நீத் அவரது கணவர் ஆகியோருக்கு செஷன்ஸ் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. .
மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு வெளியே, ‘அனுமன் சாலிசா’ எனப்படும் துதி பாட முயன்ற சம்பவத்தில் சுயேச்சை பெண் எம்.பி., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,வான அவரது கணவரும் ஏப்.23-ம் தேதியன்று கைதாகினர். அவர்கள் மீதும், மும்பை கார் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இருவரையும், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமின் வழங்கிட கோரி மும்பை செஷஷன்ஸ் கோர்ட்டில் ராணா நவ்நீத் தம்பதியினர் தாக்கல் செய்த மனு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையை மே.4-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இன்று நடந்த விசாரணையில் இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கில் ஆதாரங்களை அழிக்க கூடாது. வழக்கு குறித்து ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கோர்ட். ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து நாளை (மே.05) விடுதலையாகின்றனர்.
அனுமதியின்றி கட்டடம் கட்டியதாக நோட்டீஸ்
ராணா நவ்நீத்தும், அவரது கணவரும், மும்பை கார் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியுள்ளதாக மும்பை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசிற்கு உரிய விளக்கம் அளிக்காததால், கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் எம்.பி.,ராணா நவ்நீத் வீட்டினை ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement