டெல்லி: பேரறிவாளன் விவகாரத்தில் ஒன்றிய அரசு முடிவு எடுக்காவிடில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது? ஒரு வழக்கில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவரை விடுதலை செய்து, இதுதொடர்பான வழக்கை ஏன் முடிந்து வைக்கக் கூடாது? பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா அல்லது நீதிமன்றம் செய்யட்டுமா?’ என ஒன்றிய அரசுக்கு கேள்வியெழுப்பியதோடு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இதுவரை ஏன் முடிவு எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நிலை, அதிகார பிரச்சனையை கருத்தில் கொண்டு அவரை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்றும் கருத்து தெரிவித்தனர். ஒன்றிய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என கூறினர். தொடர்ந்து பேரறிவாளன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார். முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டா, இல்லையா என்பதை இறுதி செய்ய வேண்டியது அவசியம் எனவும் கூறினார். இதனிடையே ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நிலையில் தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஆளுநர் ஏதாவது ஒரு விளக்கம் கேட்டு முடிவு எடுக்க தாமதப்படுகிறார் என தமிழக அரசு வாதம் செய்தது. இதையடுத்து, பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். அதன் நிலை என்ன? என நீதிபதிகள் கேட்டனர். ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியதுதானே என மீண்டும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக வாதிட்டது. பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க ஏன் காலதாமதம் ஆகிறது? இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கும் பிரச்சனையில் ஏன் ஒன்றிய அரசு தலையிடுகிறது? குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்கள் எங்கே? என ஒன்றிய அரசுக்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தார். ஆளுநருக்கு எதிராக வாதிட முடியாது என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என ஒன்றிய அரசு சொன்னால் பேரறிவாளன் உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். ஒன்றிய அரசு செவ்வாய்கிழமைக்குள் முடிவெடிக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் என திட்டவட்டமாக கூறினர். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, ஒன்றிய அரசின் பதிலுக்காக பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.