புது டெல்லி:
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் என வாதிடப்பட்டது. ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் முடிவெடுக்க அவசியமே இல்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்றம்:-
பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க முடிவெடுக்க காலதாமதம் ஏன்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? மத்திய அரசு முடிவை அறிவிக்கவில்லை என்றால் நாங்கள் முடிவை அறிவிக்க வேண்டியது இருக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைத்தாரா என்று விசாரித்து வருகிறோம். பேரறிவாளன் விடுதலை குறித்து அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சி தத்துவத்திற்கு என்ன அர்த்தம்? பரிந்துரை தொடர்பாக குடியரசுத்தலைவர் முடிவெடுக்கலாம் அல்லது ஆளுநருக்கே அனுப்பி வைக்கலாம். நாங்கள் குடியரசுத்தலைவரின் முடிவிற்காக காத்திருக்க மாட்டோம்.
கண்மூடிக்கொண்டு இருக்க முடியாது. அனைவரும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும். அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் ஏன் முடிவெடுக்க வேண்டும்? சட்டம் தொடர்பான கேள்விகளில் பேரறிவாளன் அக்கறை கொள்ளவில்லை தனது சுதந்திரம் தொடர்பாகவே பேரறிவாளன் ஆர்வம் கொண்டுள்ளார்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.