வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மே 10ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று (மே 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‛மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லையென்று மத்திய அரசு சொன்னால், உடனடியாக பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்’ என கூறினர்.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது: பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறோமே, அதன் நிலை என்ன? பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக இதுவரை ஏன் முடிவெடுக்கவில்லை? பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க கால தாமதம் ஏன்? அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம்.
கவர்னரோ, ஜனாதிபதியோ யாராக இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள் தான். கவர்னர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியதுதானே? பேரறிவாளனை விடுவிக்க வேண்டிய விவகாரத்தில் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இதில் மத்திய அரசு ஏன் தலையிடுகிறது?. இவ்வாறு சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், இறுதியாக, மத்திய அரசு வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 10) முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும், எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
Advertisement