போதை மறுவாழ்வு மையம் எப்படி செயல்பட வேண்டும்?; யார் அனுமதி கொடுக்கவேண்டும் – விரிவான அலசல்

சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜி நேற்று சந்தேகமான முறையில் உயிரிழந்தார். தனது கணவரின் முகத்தில் அடித்த காயம் இருப்பதாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராஜியின் மனைவி கலா அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாசாலை போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்திய போது, ராஜியை மாப் கட்டையால் தாக்கி சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதால் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி ஊழியர்களான யுவராஜ், கேசவன், செல்வமணி, சரவணன், சதீஷ், மோகன், பார்த்தசாரதி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
image
இந்நிலையில், போதை மறுவாழ்வு மையம் எப்படி செயல்பட வேண்டும்? அனுமதியில்லாமல் செயல்படுகிறதா? யார் அனுமதிகொடுக்கவேண்டும், யார் யார் அதனை ஆய்வு செய்யவேண்டும்? என்பது குறித்து முழுமையாகக் காணலாம்.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை “போதை மறுவாழ்வு மையங்களுக்கு” அரசு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் பொறுப்பில் இருப்பவர் தான் அனுமதி அளித்து வந்தார். ஆனால் அதன் பிறகு 2 ஆண்டுகளாக தேசிய மனநல ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தற்போது இந்த ஆணையத்தின் மூலம் தான் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியும் மூத்த மனநல மருத்துவருமான மலையப்பன், “தமிழகத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் மனநல காப்பகங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 353” என்கிறார்.
இவை இயங்க , தேசிய மனநல ஆணையம் 2017-ம் ஆண்டு வகுத்துள்ள மனநல பாதுகாப்பு சட்டப்பிரிவு 122-ன் படி ஒரு மன நல மருத்துவமனையோ அல்லது போதை மறுவாழ்வு மீட்பு மையமோ இயங்கா பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
1. கட்டமைப்பு வசதி சிறப்பாக இருக்க வேண்டும்.
2. கதவு, ஜன்னல்கள், கடினமான தரமான இரும்புக் கம்பிகளுடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.
3. குறிப்பாக தற்கொலை செய்துக் கொள்ளும் வகையில் எந்தப் பொருட்களோ, உபகரணங்களோ இருக்கக் கூடாது. சுயமாக காயத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவும் பொருட்களும் இருக்கக் கூடாது.
4. நான்கு மாடிக்கு மேல் கட்டிடம் இருந்தால் லிப்ட் வசதியும், Power backup வசதியும் கட்டாயம் இருக்க வேண்டும்.
5. இயற்கைக் காற்று மற்றும் சூரிய வெளிச்சம் இருக்கும்படியான கட்டமைப்பு இருக்க வேண்டும்.
6. இரவில் கூட இயற்கை வெளிச்சம் படும் அளவிற்கு கட்டமைப்பு தேவை.
7. மறுவாழ்வு மையங்களில் தங்கி இருப்போர் வராண்டாங்களில் படுக்க வைக்கப்படக் கூடாது. அறைகளில் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும்.
8. போதுமான எண்ணிக்கையில் மின் விசிறிகள் இருக்க வேண்டும்.
9. தூய்மைப் பணிகள் அறைகளில் தினசரி நடைபெற வேண்டும். நோயாளிகளின் படுக்கைகள் உட்பட பணியாளர்களால் தினசரி தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
10. மயக்கவியல் உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், போதுமான மருந்துகள் , தெரபிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
image
இவைத் தவிர, எடுத்துக்காட்டாக 40 நோயாளிகளைக் கொண்ட ஒரு போதை மறுவாழ்வு மையத்திற்கு ஒரு பொது மருத்துவர், ஒரு மனநல மருத்துவர், 2 உளவியல் நிபுணர்கள் மற்றும் 4 செவிலியர்கள், 4 பணியாளர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் உள்ள இந்த அங்கீகரிக்கப்பட்ட 353 மையங்கள் தவிர, 100-க்கும் மேற்பட்ட மையங்கள் அரசின் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த மையத்தைப் போன்ற அங்கீகாரம் இல்லாத மையங்கள் இருப்பின், பொதுமக்கள் ஆணையத்திற்கு தகவல் கொடுத்தாலோ அல்லது புகாரளித்தாலோ, உடனடியாக மையத்தை ஆய்வு செய்து மூடவும், அதை நடத்துபவர் மீது வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை பெறும் அளவிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
– சுரேந்தர், சுகன்யா.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.