இந்தி மட்டும் தான் இந்தியாவின் மொழியா என தென்னிந்திய நடிகர்களுக்கும் பாலிவுட்டில் ஹிந்தியை ஆதரிப்பவர்களுக்குமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நடிகை சுஹாசினி பேசியது சர்ச்சையானது. அவர் இந்தி மொழி நல்ல மொழி என்றும் இந்தி மக்கள் நல்லவர்களை என்றும் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அமீர், ” அப்போ தமிழில் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என சுஹாசினியிடம் கேட்கணும். தமிழில் பேசுபவர்கள், கன்னடத்தில் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் சம்ஸ்கிருத்ததில் உறுதிமொழி எடுத்த செய்தி வந்தது. ஒருகாலத்தில் சம்ஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என இருந்ததை உடைத்து தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கோம். பழையபடி 100 வருடத்திற்கு முன்பே கொண்டு போகிற செயல்தான் இது. இந்தி மொழி பேசாதவர்கள் இந்த நாட்டில் இருக்கவேண்டிய அவசியமில்லை எனச் சொல்கிறார்கள். யாருடைய நாட்டில் இருந்து யாரை வெளியே போகச் சொல்கிறார்கள். எது என் நாடு? எது அவர்கள் நாடு என்கிற கேள்வி வருகிறது.”
“இந்தி மொழி பற்றி திரை கலைஞர்கள் பேசுவது அவர்களின் சுய இலாபத்திற்காக. மக்களின் அன்பை கொஞ்ச கொஞ்சமாக சேகரித்து ஒரு இடத்திற்கு வந்துவிட்ட பிறகு தங்களை ஒரு கம்பெனிக்கோ, கட்சிக்கோ கொண்டு போய் வித்துடுவாங்க. திரைக் கலைஞர்ளை திரையில்தான் ரசிக்கணும். இந்தி தான் தேசிய மொழி என சொல்வது பாசிசத்தின் தொடக்கம். பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். என் தாய்க்காக என் குடும்பத்திற்காக சண்டையிடுவது எவ்வளவு அவசியமானதோ அதேபோல மொழிக்காகவும் களத்தில் நின்று சண்டையிடுவது அவசியமானது. தமிழ் கலைஞர்கள் தங்கள் மொழிப்பற்றைக் காட்டுவது கிடையாது அதற்கு காரணம் சுயநலம். தங்களுடைய படம் வியாபாரத்தில் பின்தங்கிவிடக்கூடாது. சர்ச்சைக்களில் சிக்கிவிடக்கூடாது என கவனமாகக் கையாள்வது என்கிற பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். நடிகர்கள் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும்போது மக்களின் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். பேசாமல் இருப்பது என்பது அவர்களை ரசிக்கிற மக்களுக்கு செய்கிற துரோகம் என்று தான் பார்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.